ஆர்பிஐ அதிகாரிகள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? - கனிமொழி எம்பி காட்டம்

தமிழ்தாய் பாடலுக்கு எழுந்து நிற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரிசர்வ் வங்கி அலுவல அதிகாரிகள் குறித்து கனிமொழி எம்பி ட்வீட் செய்துள்ளார்.

ஆர்பிஐ அதிகாரிகள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? - கனிமொழி எம்பி காட்டம்

நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அவரது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

அதில், ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனுடன் தமிழ்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவித்து தமிழக அரசு வெளியிட்டியிருந்த அரசாணையும் வெளியிட்டு மேற்கோள்கட்டியுள்ளார்.

அந்த அரசாணையில், தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வரசாணையின் படி, தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை, கனிமொழி எம்பி மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார்.