முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, மேலும் ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடைபெற்று வந்தநிலையில், தற்போது அந்த எண்ணிக்கையானது 48 இடங்கள் ஆக அதிகரித்துள்ளது

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, மேலும் ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குபதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

சுமார் 150-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் காலை 7 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் கீழ்பாக்கம், தி.நகர், பெசன்ட் நகர், நந்தனம், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம் என 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கீழ்பாக்கம் ரெம்ஸ் தெருவில் உள்ள வீட்டில் டி.எஸ். பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் மகள்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக விஜயபாஸ்கரின் மூத்த மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிபிஇ  உடையுடன் சென்று விசாரணை நடத்தினர். 

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு நடைபெறுவது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

43 இடங்களில் சோதனை நடைபெற்று வந்தநிலையில், தற்போது அந்த எண்ணிக்கையானது 48 இடங்கள் ஆக அதிகரித்துள்ளது அதன்படி சென்னையில் மேலும் ஒரு இடத்திலும் மதுரையில் இரண்டு இடத்திலும் திருச்சியில் ஒரு இடத்திலும் புதுக்கோட்டையில் ஒரு இடத்திலும் சோதனை செய்யப் பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்