அதிமுகவுடன் கூட்டணி இல்லை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு...

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பாமக தனித்துப் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு...

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுப்பதற்காக, அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் 9 மாவட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் கலந்துகொண்ட நிர்வாகக்குழு கூட்டம், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைக் கருதி, உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பாமக தலைவர் ஜி,கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து, இன்றும், நாளையும் விருப்ப மனுக்கள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வர் என்றும், உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 5 இடங்களில் பாமக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.