"சாதிய அரசியல் செய்கிறது திமுக" அண்ணாமலை குற்றச்சாட்டு!

சாதிய அரசியல் செய்யும் திமுக, கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை முதலிடமாக மாற்றியுள்ளதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டாா். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜகாளியம்மன் கோயில் பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவா், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தாா். 

பின்னா் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்த அண்ணாமலை உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினாா். 

அப்போது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொிவித்தாா். மேலும் திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழி சாலை திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையுள்ளது என்றாா்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரே குடும்பத்தை காப்பதற்காக மட்டுமே ஆட்சி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவா், கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை முதலிடமாக திமுக மாற்றியுள்ளதாக சாடினார்.

தொடா்ந்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் சாதி வெறியை தூண்டி விட்டு திமுக சாதி அரசியல் செய்து வருவதாக சாடினாா். மேலும் திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட அனைத்தும் அதிகாித்துள்ளதாக குற்றம்சாட்டினாா். 

இதையும் படிக்க: "திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது" - முதலமைச்சர்