ஒரு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத  வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண் டுள்ளார்.

ஒரு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.

அசாம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ஏராளமான நடன கலைஞர்கள் பாரம்பரிய உடையணித்து நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் கையசைத்து மோடியை வரவேற்ற மக்களுடன் பிரதமர் மோடி கைக்குலுக்கி தனது அன்பை பரிமாறிக் கொண்டார்.

இதை தொடர்ந்து கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ளார். அங்கு கூடியிருக்கும் லட்சகணக்கான மக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத  வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். போடோ ஒப்பந்தம்-2020" நீடித்த அமைதிக்கான புதிய வழிகளை ஏற்படுத்தியது என்றார்.

சிறந்த சட்டம் ஒழுங்கு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக அசாம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அனைவருக்கும்! அனைவருக்குமான வளர்ச்சி!!" என்ற உணர்வோடு எல்லை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருவதாகவும், அசாம்-மேகாலயா இடையே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் என்பது மற்ற மாநிலங்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவர், 500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி, பட்டக் கல்லூரி, மற்றும் விவசாயக் கல்லூரி ஆகியவற்றுக்கு  அடிக்கல் நாட்டுவதுடன், திப்ருகர் புற்றுநோய் மருத்துவமனையை மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.

அதையடுத்து 3 மணி அளவில் கானிக்கர் திடலில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், மேலும் 6 புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து, 7 புதிய புற்றுநோய் மருத்துவ மனைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.