சென்னையில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா? மேயர் பிரியா சொன்ன பதில் என்ன?

சென்னையில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா? மேயர் பிரியா சொன்ன பதில் என்ன?

சென்னையில் அம்மா உணவகங்கள் எப்போதும் போல் செயல்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்...

பல்வேறு குற்றச்சாட்டுகள்:

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகம் திட்டம் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது சென்னையை பொறுத்தமட்டில் வார்டு வாரியாக 400க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆளும் கட்சியாக மாறியது. இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியில் உருவான அம்மா உணவக திட்டத்தை மூடும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக ஆளும் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது வருகிறது.

மாதாந்திர மாமன்ற கூட்டம்:

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது.  அதன்படி, இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற கூட்டத்தில், வள்ளுவர் கோட்டம் மேம்பாலம் திட்டத்திற்காக நிலம் கையப்படுத்தும் பணி, பள்ளிகளை புதுப்பிக்கும் பணி, எரிவாயு தகன மேடை கட்டும் பணி உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதையும் படிக்க: ஆதார் இணைப்பு: லஞ்சம் வாங்கினால்...அதிகாரிகளை எச்சரித்த மின்வாரியம்...!

எப்போதும் போல் செயல்படும்:

பின்னர் மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா ராஜன் பதிலளித்தார். இதில், வருமானம் குறைவாக உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மேயர் பிரியா, அம்மா உணவகங்கள் எப்போதும் போல் செயல்படும் என்று  கூறினார். ஏதேனும் குறிப்பிட்ட உணவகங்களில் உள்ள பிரச்சனைகள், வருமானம் குறைவு பற்றி ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வை தொடர்ந்து பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார். இதன்மூலம் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது என்பது உறுதியானது. 

மேலும், காலை சிற்றுண்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த மேயர் பிரியா, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கும் படிப்படியாக காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.