இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : அ.தி.மு.க உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு :

நீட் தேர்வு விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10.30  மணிக்கு  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. 

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் : அ.தி.மு.க உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு :

மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.  நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி. க்கள் ஜனாதிபதி அலுவலகம் சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்தனர்.

இதற்கிடையே, தமிழக சட்டசபையில் விரிவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி இன்று ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க, அ.தி.மு.க உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.