வேளாண் பட்ஜெட்2023: முக்கியத் திட்டங்கள்...!!

வேளாண் பட்ஜெட்2023:  முக்கியத் திட்டங்கள்...!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று காலை 10 மணிமுதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.   இந்த வேளாண் பட்ஜெட்டானது  திமுக அரசால் தாக்கல் செய்யப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டாகும்.  சிலப்பதிகாரத்தின் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ பாடலை மேற்கோள் காட்டி வேளாண்மையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி வருகிறார் அமைச்சர்.

முக்கிய திட்டங்கள்:

தென்னை மேம்பாட்டு திட்டம்:

தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.   இதற்காக தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துக்கள் சிறப்பு திட்டம்: 

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் உருவாக்கப்பட்டு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

கறிவேப்பிலை தொகுப்பு: 

கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

பயிர் காப்பீட்டு மானியம்:

பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசின் காப்பீட்டு மானியத்திற்கு ரூ.2337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0: 

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்திற்காக 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி: 

பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவர்.

மின்னணு வேளாண்மை திட்டம்:

37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பெறும் வேளாண் இடுபொருளுக்கு பணமில்லா பரிவர்த்தனை செய்யும் விதமாக மின்னணு வேளாண்மை திட்டம் தொடங்கப்படவுள்ளது.

சிறப்பு ஊக்கத் தொகை: 

கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படவுள்ளது.

இதையும் படிக்க:   வேளாண் பட்ஜெட்2023: முக்கிய அறிவிப்புகள்...!!!