கண்ணை மறைச்சிருச்சு... அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி... தொகுதி மாறியதன் பின்னணி இதுதானா? 

கண்ணை மறைச்சிருச்சு... அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி... தொகுதி மாறியதன் பின்னணி இதுதானா? 

சிவகாசி தொகுதியை விட்டு, ராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டதற்கான காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று அண்மையில் அதன் முடிவுகள் வெளியாகின. இதில் திமுக அமோக வெற்றிப்பெற்றது. ஆனால் சுமார் 10 ஆண்டுகள் ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட அதிமுக, வீழ்ச்சியை சந்திக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. குறிப்பாக அக்கட்சியில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் முதல்வரின் தளபதி போல் செயல்பட்டு வருவதால், அதிமுக வெல்லக்கூடிய தொகுதிகளில் அவர்களுக்கான ஓட்டு வங்கி குறையும் என கூறப்பட்டது.

இதேபோல் பால் வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என கூறப்பட்டது. இதற்கு காரணம் ராஜேந்திர பாலாஜிக்கு அவர் போட்டியிட்ட சிவகாசி தொகுதியில் நல்ல பெயர் இல்லை என்பதாய் கூறப்பட்டது. மேலும் சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக உள்ளடி வேலைகளை பார்த்ததால், அதிர்ந்தே போன அவர் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, ஜோசியர் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே ராஜேந்திர பாலாஜி தொகுதி மாறி போட்டியிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஜோசியர்கள் 4 பேர் வாஸ்து சாஸ்திரம் பார்த்து, ராஜேந்திர பாலாஜிக்கு ஜாதகம் கணித்துள்ளனர். அதன்பேரில் “மாவட்டத்தின் மேற்கு மூலையில் இருக்கும் ராஜபாளையத்தில் நின்றால் ராஜயோகம் தான்’’ என்று சொல்லியுள்ளார்களாம் அந்த கில்லாடிகள்.. மேலும் ராஜபாளையத்தில் நின்றால் மீண்டும் அமைச்சராக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியுள்ளார்கள்... இதனை அப்பாவியாக நம்பிய அவர், கை மணிக்கட்டை சுற்றிலும் கையிறுகளை கட்டிக்கொண்டு, போட்டியிட்டாராம். ஆனால் இப்போது அவர் ஏகத்துக்கும் அப்பெட்டில் உள்ளாராம்.

தன்னை பார்க்க வரும் நண்பர்கள் பெயருக்கு ஆறுதல் கூறி, ‘‘நீங்க சிவகாசியிலேயே நின்னுருந்தா ஜெயிச்சிருக்கலாம்ணே” என்று கூறிவருகிறார்களாம்... இதற்கு கவலை தெரிவித்து பதில் கூறும் பாலாஜி, ‘என்ன செய்ய... கண்ணை மறைச்சிருச்சு. விதி வலியதுங்க என்று கூறுகிறாராம்.. ஊழல் லிஸ்டை திமுக கையில் எடுத்தால் அதில் தான் தான் டாப்பில் இருப்பேன் என்ற பீதியில் இருக்கும் அவர், பாஜகவுக்கு தாவினால் தான் என்ன? என்றும் யோசித்து வருகிறாராம்.