ஆதி திராவிட நலத்துறை அதிகாரி காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. யாருடைய பணம்? எங்கு எடுத்துச் செல்கிறார்?- விசாரணை தீவிரம்

விழுப்புரம் அருகே ஆதி திராவிட நலத்துறை அதிகாரியின் காரில் இருந்து 40 லட்ச ரூபாய் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதி திராவிட நலத்துறை அதிகாரி காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்.. யாருடைய பணம்? எங்கு எடுத்துச் செல்கிறார்?- விசாரணை தீவிரம்

திருச்சி மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அதிகாரியான சரவணகுமார் என்பவர் தனது காரில் 40 லட்ச ரூபாயுடன் சென்னை சென்று கொண்டிருப்பதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கெடிலம் என்னும் இடத்தில் அந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 40 லட்ச ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பணத்துடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வளவு பெரிய தொகையை எங்கு எடுத்துச் செல்கிறார்?, யாருடைய பணம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் விசாரணை நடத்தி வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்துத்துறை அதிகாரி நடராஜனின் அலுவலக அறையில் 34 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய நிலையில், தற்போது ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி 40 லட்ச ரூபாயுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.