"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்" அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை!

"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்" அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை!

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை இந்த கல்வி ஆண்டிலேயே பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்  நிறுவனத் தலைவர் சா அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கள்ளர், சீர்மரபினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட பள்ளிகள் அனைத்தையும்  பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றி தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்  நிறுவனத் தலைவர் சா அருணன் அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் சிலர் தற்போது இந்த இணைப்பிற்கு தவறாக திசை திருப்பி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், "ஒரு காலக்கட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது, சீருடை இலவசம், நோட்டு புத்தகம் இலவசம், விடுதியில் தங்கி படிக்க இலவசம், உதவித் தொகை இது போன்ற சலுகைகள் இருந்தது இதற்கு மாறாக  பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சேருவதற்கு  கட்டணம் செலுத்த வேண்டும் பாட புத்தகம் நோட்டுபுத்தகம் சீருடை அனைத்தும்  பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஏழ்மை நிலை காரணமாக ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்த்தார்கள்,  ஆனால் இதற்கு மாறாக  பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து  பயில்வதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது, நோட்டு புத்தகம் சீருடை அனைத்தும் பணம் கொடுத்துத்தான் பெறவேண்டும் என்ற நிலை இருந்தது இதன் காரணமாக தான் ஆதிதிராவிடர் பள்ளிகளை பெற்றோர்கள் நாடினார்கள்" என தெரிவித்துள்ளார். 

மேலும், இப்போது நிலைமை அப்படி இல்லை என சுட்டிக்காட்டிய அவர் எந்த அரசு பள்ளிகளாக இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளிகளாக இருந்தாலும் எந்த சமுதாயத்தை சார்ந்த மாணவர்களாக இருந்தாலும்  கட்டணம் கிடையாது சீருடை நோட்டு புத்தகம் , மிதிவண்டி , மடிகணினி , காலணி , எழுது பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் , உதவித் தொகை அனைத்தும் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளில் என்ன சலுகைகள் வழங்கப்படுகிறதோ அத்தனை சலுகைகளும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகிறது.  மேலும் அரசு பள்ளிகளில் 80% விழுக்காடு முதல் 90% விழுக்காடு வரை ஆதிதிராவிட மாணவர்களே பயில்கின்றனர். இப்படி இருக்கையில் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.  

தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதால் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் தாங்கள் வசிக்கும் மாவட்டம், ஒன்றியத்தில் பணியிட மாறுதல் பெற ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன்கருதி அனைத்து சிறப்பு பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைத்ததை இந்த கல்வி ஆண்டியிலேயே நடைமுறை படுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:"83 மதிப்பெண்ணுக்கும் 84 மதிப்பெண்ணுக்கும் ஒரு நூற்றாண்டு வித்தியாசம்" விளக்கமளித்த இளம் பெண்..! வாழ்த்திய முதலமைச்சர்..!!