தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்: எதற்கெல்லாம் அனுமதி உள்ளது முழு விவரம்...

தமிழகத்தில்  கூடுதல் தளர்வுகளுடன்  ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு  நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்: எதற்கெல்லாம் அனுமதி உள்ளது முழு விவரம்...

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள் வகை ஒன்றாக பிரிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை முதல் அத்தியாவசியக் கடைகளுடன், மின்னணு சாதனங்கள் விற்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்றும், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி முதல் செயல்படலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகளும் 100 சதவீத பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது.,இதர அரசு அலுவலகங்கள்‌, 50 சதவீத பணியாளர்களுடன்‌ இயங்கவும், இ-சேவை மையங்கள், விளையாட்டு பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்காக்களை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை 2ல் குறிப்பிடப்பட்டுள்ள 23 மாவட்டத்திற்கு உள்ளேயேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, கட்டுமானப் பணி மேற்கொள்ளும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன்‌ செயல்படலாம் என்றும் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை 3 இல் சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.அதன்படி, இந்த 4 மாவட்டங்களிலும் மத வழிபாட்டு தலங்களை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து துணிக் கடைகள், நகைக்கடைகள் ஆகியவை குளிர் சாதன வசதியில்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம் என்றும்.,திரையரங்குகள் தவிர்த்து வணிக வளாகங்கள் அனைத்தும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் அலுவலகங்களை பொறுத்தவரை 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்கலாம்.

அருங்காட்சியகங்கள் மற்றும் புராதண சின்னங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அனைத்து கடற்கரைகளிலும் நாளை முதல் பொதுமக்கள் காலை 5 மணியிலிருந்து 9 மணி வரை நடை பயிற்சி செய்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.