தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்..? முதலமைச்சர் இன்று ஆலோசனை...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்..? முதலமைச்சர் இன்று ஆலோசனை...

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு சமமான அளவில் இருந்து வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 7-ம் தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 36 ஆயிரத்தை கடந்தது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது..இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

எனவே, மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க அரசு வலியுறுத்தியிருந்தது, இதுத்தொடர்பான அறிக்கையும் அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைப்பெறும் ஆலோசனையில், முதற்கட்டமாக,6 முதல் 8ம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாள்களில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதில் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
 
அதேப்போல், தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பள்ளிகள் திறப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.