இடம் ஒதுக்கீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் கே.என்.நேரு!!

இடம் ஒதுக்கீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.... அமைச்சர் கே.என்.நேரு!!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், வால்பாறை, புதுக்கோட்டை, கும்பகோணம், ஆரணி பகுதியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுராந்தகம், வால்பாறை, புதுக்கோட்டை, கும்பகோணம், ஆரணி பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையத்தை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், வால்பாறை பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருவண்ணாமலை பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால்,  அதனை தரம் உயர்த்த அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.

அதேபோல், புதுக்கோட்டை பேருந்து நிலையம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கும்பகோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட சித்தர் தின விழா...!!