வேறுயாராவது குடிசை மாற்று வாரியத்தில் வீடுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை!! அமைச்சர் தாமோ அன்பரசன் அதிரடி

குடிசை மாற்று வாரியத்தில் பயனாளிகள் அல்லாதோர் வீடுகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்

வேறுயாராவது குடிசை மாற்று வாரியத்தில் வீடுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை!!  அமைச்சர் தாமோ அன்பரசன் அதிரடி
சென்னை வால்டக்ஸ் சாலையில் உள்ள கல்யாணபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஊரக தொழிலத்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை  அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், சென்னை கல்யாணபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சிதிலமடைந்த வீடுகளை இடித்துவிட்டு ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கு வீடுகள் வழங்கவுள்ளது.  தமிழகத்தில் குடிசைகள் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்.
 
குடிசை மாற்று வாரியத்தில் பயனாளிகள் அல்லாதோர் வீடுகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் சார்பில் உள்ள சிதிலமடைந்த வீடுகளை அப்புறப்படுத்தி புதிய வீடுகளை கட்ட முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார். குடிசை மாற்று வாரியத்தில் வீடுகளை அதிகப்படுத்தி ஏற்கனவே உள்ள அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது, ஆனால் ஆவணங்களை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் உள்ள கடத்தப்பட்ட சிலைகளை உடனடியாக மீட்க திறமையான அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் திங்கள் கிழமை ஆலோசனை நடைபெறவுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.