முன்னாள் அமைச்சர் மீது சொத்துகுவிப்பு வழக்கு... வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சேர்த்திருப்பதாக புகார்...

விஜயபாஸ்கர் அவரது மனைவியிடம் நேரில் விசாரணை நடத்தவும் திட்டம்

முன்னாள் அமைச்சர் மீது சொத்துகுவிப்பு வழக்கு... வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சேர்த்திருப்பதாக புகார்...

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவுச் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 18ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 4 புள்ளி எட்டு ஏழு கிலோ தங்கம், 138 கனகர வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள், 24லட்சம் ரூபாய் ரொக்க பணம், மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் இடங்களை பூட்டி லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் வைத்து சென்றனர். 

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை எஸ்.பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 138 பேருந்துகளின் பதிவு சான்றிதழ்களை விசாரித்து வருகின்றனர்.

மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள சரவணன் மற்றும் சந்திரசேகரின் வீட்டை திறந்து சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் மூலமாக ஆர்டர் பெற லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்.  விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோரின் வங்கி கணக்கு, வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த முடிவு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். தேவையான ஆதாரங்களை திரட்டிய பின்பு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.