திமுக அரசிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பிய அதிமுகவினர்...தமிழகம் முழுவதும் போராட்டம்!

திமுக அரசிற்கு எதிராக கண்டனங்களை எழுப்பிய அதிமுகவினர்...தமிழகம் முழுவதும் போராட்டம்!

தமிழகத்தில், போதை கலாச்சாரம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், போதை பொருள் மற்றும் விஷச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு, தி.மு.க. அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால், உயிழப்பு ஏற்படுவதைக் கண்டித்தும், போதை கலாச்சாரத்தால், குற்றங்கள் பெருகி வருவதைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.  நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். இதில், தி.மு.க. அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதேபோன்று, திருவாரூர் புதிய ரயில் நிலையம் எதிரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு தி.முக. அரசைக் கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதையும் படிக்க : ”230 -ல் 150 தொகுதிகளை கைப்பற்றுவோம்...மத்தியப்பிரதேசம் தேர்தல் குறித்து ராகுல்காந்தி நம்பிக்கை”!

திண்டுக்கல் மாவட்டம் மணிகூண்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பினர். 

கள்ள சாராயம், கஞ்சா, போலி மதுபான விற்பனையை தடுக்க தவறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதேபோல், நாகை மாவட்டம் அபிராமி திருவாசல் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.