அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்த தீர்ப்பு...ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்த தீர்ப்பு...ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பி.எஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இ.பி.எஸ்  மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படன. கடந்த 22ஆம் தேதி விசாரணை நடைபெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.  அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட  எதிர் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பூக்கள் தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

இதையும் படிக்க : அனைத்து அரசு நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் ...!!!

இதனிடையே தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் அமர்வு தெரிவித்துள்ளது.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.