மீண்டும் வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை, மீண்டும் சென்னை வானகரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!

கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதற்கு முன்தினம் பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பின்பு அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என்றும், ஆனால் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக் கூடாது என தீர்ப்பளித்திருந்தனர்.

நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கான இடம் குறித்து பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் ஆய்வு நடத்தினர்.

குறிப்பாக சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள விஜிபி தங்க கடற்கரை அல்லது பெங்குடி ஓய்எம்சிஏ மைதானத்தில், திறந்தவெளி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படலாம் எனக்கூறப்பட்டது. ஆனால், தற்போது, மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே பொதுக்குழு கூட்டத்தை நடத்த அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.