சசிகலா தலைமைக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு!! குஷியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!!

தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகிகள் சசிகலா கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

சசிகலா தலைமைக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு!! குஷியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!!

ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு சசிகலா மூலம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவை எதிர்த்து தியானம் செய்து தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும், சசிகலா சிறை சென்ற பிறகு ஒன்றாக கைக் குலுக்கி அதிமுகாவை வழிநடத்தி சென்றனர். 

கட்சியின் தலைமையிடத்தை மீண்டும் பிடித்து விடலாம் என்ற கனவோடு ஓபிஎஸ் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வுக்கும் செக் வைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வகித்தாலும், கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது. துணை முதலமைச்சர் பதவி கொடுத்தாலும், சுதந்திரமான முடிவை எடுக்க முடியாமலும், அதிகாரம் கிடைக்காமலும் ஓரங் கட்டப்பட்டார் பன்னீர்செல்வம். 

இதனால் திரைக்கு முன்னால் கைக்குலுக்கிக் கொண்ட இருவரும் திரைக்கு பின்னால் முகத்தை திருப்பிக் கொண்டே சென்றனர். சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதற்கும், தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆவதற்கும் கூட மிகப் பெரிய போராட்டம் நடத்திய ஓபிஎஸ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

சசிகலா சிறையிலிருந்து வெளியேறிய பிறகு எங்கே மீண்டும் அதிமுகவை கைப்பற்றி நம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவாரோ என அரண்டு போன எடப்பாடியின் ஆதரவாளர்கள் அவசரம் அவரசரமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை அவசரமாக திறந்து பின்னர் உடனடியாக மூடியது முதல், தற்போது அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என தீர்மானம் எடுத்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தது வரை அனைத்துமே பயத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அதிரடியாக அறிவித்ததால் பெருமூச்சு விட்டனர் எடப்பாடி தரப்பினர். விட்ட மூச்சை மீண்டும் உள் இழுக்க முடியாத அளவுக்கு, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைப்பேசி வாயிலாக உரையாடி அவ்வப்போது அந்த ஆடியோக்களையும் இணையங்களில் பரவவிட்டார். 

இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வந்த போது, இந்த விவகாரங்களில் எந்த மூச்சும் விடாமல் இருந்த ஓபிஎஸ், கட்சி ஒருங்கிணைப்பாளராகிய என்னைக் கேட்காமல் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் எடுக்கும் படி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆணையிட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். இதனால் நெஞ்சடைத்துப் போன பழனிசாமியின் நடு உச்சியில் ஆணி அடித்தாற்போல், தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் எடுத்துள்ளனர். 

மீண்டும் சசிகலா கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், ஓபிஎஸிஸின் கை ஓங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பால் அவரது ஆதரவாளர்கள் குஷியாகியுள்ளனர். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.