அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி?.. சி.வி சண்முகம், வைத்திலிங்கம் இடையே வார்த்தைப்போர்

அதிமுகவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த நிலையில், அவர் கூறியதை ஏற்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளரான அக்கட்சி துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி?..  சி.வி சண்முகம், வைத்திலிங்கம் இடையே வார்த்தைப்போர்

கடந்த வியாழன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் களேபரங்களுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம்,

வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார். மேலும் ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் என்றார்.

கடந்த டிசம்பர் 1ம் தேதி செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காததால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஈபிஎஸ்  தரப்பு சொல்லும் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்தார்.