ஓ.பி.எஸ்., இன்று தேனி பயணம் : ஈபிஎஸ்க்கு எதிராக ஆதரவு திரட்ட ஓபிஎஸ் திட்டம் !!

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று தேனி செல்கிறார். ஈபிஎஸ்க்கு எதிராக ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளதால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஓ.பி.எஸ்., இன்று தேனி பயணம் : ஈபிஎஸ்க்கு எதிராக ஆதரவு திரட்ட ஓபிஎஸ் திட்டம் !!

சென்னையில் கடந்த 23ம் தேதி பெரும் கூச்சல் குழுப்பங்களுக்கு இடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. நீதிமன்ற தடையால் இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான தனித்தீர்மானத்தை நிறைவேற்ற முடியாததால்  ஈபிஎஸ் தரப்பு ஏமாற்றமடைந்தது. எனினும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் உறுதியுடன் அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு கூடும் என ஈபிஎஸ் தரப்பு அறிவித்தது. 

இதனையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். ஈபிஎஸ்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் அளித்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை ஓபிஎஸ் தரப்பு மறுத்தது. தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஓபிஎஸ் சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது. எனினும் யாரையும் சந்திக்காத ஓபிஎஸ் நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். 

இந்நிலையில், பொதுக்குழு விவகாரம் குறித்தும், தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் குறித்தும் முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை  தொடர்பு கொண்டு பேசி ஆதரவு திரட்ட ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக, இன்று தேனி செல்லும் அவர், அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி எடப்பாடி பழனிசாமியால் பழிவாங்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான மோதல் அடுத்த கட்டத்துக்கு  செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.