அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, ஈபிஎஸ் தரப்பு வேட்பாளரான தென்னரசுக்கு ஆதரவா, இல்லையா எனக் கேட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவங்கள் அனுப்பப்பட்டன. அதேபோல், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓபிஎஸ் அணிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், அதிமுக அவைத்தலைவர் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்மகன் உசேன் மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்ததற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டத்திற்குப் புறம்பாக அறிவிக்கப்பட்ட தென்னரசுவை ஆதரிக்க முடியாது என கூறினார். பொதுக்குழுவை கூட்டி அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என கூறிய பண்ருட்டி ராமசந்திரன், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார். ஒருவரை மட்டும் வேட்பாளராக தேர்ந்தெடுத்து அதை கடிதத்தில் இடம்பெற செய்து அனுப்பி இருப்பது ஏற்புடையது இல்லை என்றார். மேலும் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதத்திற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.