தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என அதிமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லையா? முதல்வர் கேள்வி

தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்த காரணத்தாலேயே, கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு நடவடிகைகளை மேற்கொள்ளவில்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என அதிமுக நடவடிக்கைகள்  மேற்கொள்ளவில்லையா? முதல்வர் கேள்வி

16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல்  கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார். 

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சமூக நீதியை காத்த நீதிக்கட்சியின் வரலாற்று தொடர்ச்சியில் திமுக ஆட்சி அமைத்திருப்பதை பெருமையாக கருதவதாகக் கூறினார்.

’இது டிரெய்லர் தான், முழுநீள படத்தை திரையில் காண்பீர்கள்’ என்பது போல ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான் என்று கூறிய முதலமைச்சர், திட்டங்கள் அனைத்தும் பட்ஜெட்டில் இருக்கும் எனத் தெரிவித்தார். 

மேலும், 100 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்திய குடியுரிமை சட்டம், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என உறுதி அளித்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

வட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கிட திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் எனக் கூறினார். 

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ மையங்கள் அமைப்பதோடு, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் கொரோனா அதிகரித்ததாக எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை என்று தெரிந்த காரணத்தாலேயே, கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு நடவடிகைகளை மேற்கொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

அதேபோல் ’நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ என்ற திரைப்படத்தை போல, அதிமுக ஆட்சியில் கடைசி இரண்டு மாதங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டாரா? என்றும் பதிலடி கொடுத்தார்.
breathe..