அந்த கடிதத்தில் ஆ ராசா கூறியிருப்பதாவது: வணக்கம். 'நன்றி என்பது பெற்றுக்கொண்டவர் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சியை தவிர, செய்தவர் பெருமைப்பட்டுக் கொள்ள அல்ல' என்ற தந்தை பெரியாரின் வாழ்வியல் நெறி என் சிந்தனையுன் பரவுவதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்; 'தாய்க்குப்பின் தாரம்' என்ற வழக்குமொழி எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்கின்ற இந்நேரத்தில் உங்களின் பேரன்பு என்னை ஊர்களின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப்போல "அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க வயிறுதாங்கா காரணத்தால் தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகள் நாம் " என்று பாச இலைகள் கட்டப்பட்டதுதான் நம் கழகம் என்பதை நான் அறிவேன். அதைக் கடமையாய் கொண்டு உணர்ச்சியோடு தொடர்ந்து கட்டமைத்துக் கழகம் காத்தவர் கலைஞர். 2ஜி அலைக்கற்றை வழக்கில் நான் சிக்குண்ட போது, பணி கூடத்தில் வைத்து என்னை காப்பாற்றிய தாய் கலைஞர். அந்தத்தாய் இன்று இல்லாமல் போனாலும் அதே தாய்மையை தங்களிடம் கண்டு உணர்ந்து வியந்து உங்களை வணங்குகிறேன்.
என் அருமைத் துணைவியார் பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் பெற்ற நாள் முதல் தாங்கள் அவர் உடல்நலம் மீது காட்டிய அக்கறையும் அன்பும் நம் இருவருக்குமான தனிப்பட்ட உணர்வு இல்லாமல்; - ஒரு குடும்பத் தலைவனுக்கு இருக்க வேண்டிய பாச உணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் பின்னி பின்னி ஜடை போட்டு கொள்கிற நிகழ்வாய் கூட நின்று விடாமல், ஒரு மாபெரும் இயக்கத்தை அதன் அரசியல் பண்பு கடந்து அன்பால், கருணையால், பரோபகாரத்தால் ஆட்கொண்டு மானுடம் போற்றும் மகத்துவம் தங்களின் ஆளுமை என்றுணர்ந்து என் சோகத்திலும் இனம் புரியாத சுகம் கொள்கிறேன்.
ரேலா மருத்துவமனைக்கு வந்து மருத்துவருடன் அமர்ந்து என் துணைவிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை வரையறுத்து வழிநடத்திய தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், நோய்வாய்ப்பட்ட என் துணைவிக்கு மட்டுமில்ல நொறுங்கிக் கிடந்த என் இதயத்திர்க்கும் மருந்தாக அமைந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு காலன் என் துணைவியின் விலாசத்தை தெரிந்து கொண்டான் என்ற தகவல், முதல்வரான உங்கள் கவனத்திற்கு எனக்கு முன்பே உளவுத்துறை சொல்லியிருக்க வேண்டும்.
மதிய உணவை ஒத்திவைத்துவிட்டு அண்ணியாரோடும், தம்பி உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் ஆகியோருடன் மருத்துவமனைக்கு வந்து பாசத்தையும் உணர்ச்சியையும் சற்று தளர்த்திக் கொண்டு பெரியார் சொன்ன 'இயற்கையின் கோணல் புத்தியை' எனக்கும் என் அருமை மகள் மயூரி க்கும் எடுத்துச் சொல்லி எங்களின் கரம்பற்றி தோள் தட்டி ஆறுதல் சொன்னீர்கள். என் துணைவியின் இறுதி மூச்சு வலியின்றி போக வேண்டும் என்று நானும் என் மகளும் மருத்துவமனையில் கலங்கி காத்துக்கிடந்த போது, என்னோடு இருந்த தம்பி உதயநிதியிடம் நீங்கள் அதையே விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
மாலை 7.05 க்கு அவரின் கடைசி இயக்கம் நின்று போனது என்று அறிந்து , நாங்கள் கதறி அடங்கிய சிறிது நேரத்தில் நீங்கள் தம்பி உதயநிதி தொலைபேசியில் அழைத்து அளித்து அறிவுரையை அருகில் இருந்து என்னால் கேட்க முடிந்தது. கொரானா காலத்தில் கூட்டம் சேர கூடாது என்ற அக்கறை ஒரு முதலமைச்சருக்கு இருக்கும் என்றாலும் தம்பி உதயநிதியை என் துணைவி உடல் அடக்கம் செய்யப்படவிருந்த கிராமத்திற்கு சென்று வர அனுமதித்து பணித்தீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தில் ஒரு சிறு துளியாய், கலைஞரின் நம்பிக்கைக்குரிய உடன்பிறப்புகளில் ஒருவனாய் , உங்களின் சகோதரனாய் நானறிய பட்டதால், என் துணைவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் , காவல்துறையினர் எல்லாவற்றுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதும் எண்ணிலடங்கா கழக உடன்பிறப்புகள் என பல்லாயிரம் பேர் வந்து எனக்கும் என் மகள் குடும்பத்தாருக்கும் ஆறுதல் அளித்தனர்.
துணைவியின் மரணத்திற்குப் பிறகு வெறிச்சோடி போன என் இதயத்தில் உங்களின் அன்பும் அரவணைப்பும் நாற்காலி போட்டு உட்கார்ந்து இருக்கின்றன. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. துணைவியின் உடல் நல்லடக்கத்தில் கூட எந்த சடங்கையும் அனுமதிக்காத பகுத்தறிவாளன் நான். என்றாலும் உங்களின் அன்பும் அரவணைப்பும் எடுத்துக் கொண்ட தொடர் அக்கறையும் என்னை திருவாசகத்தின் பக்கம் திருப்புகின்றனர். தக்க வரிகளுக்காக!
நன்றியுடன் வணங்குகிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.