வெளிநாட்டில் சிக்கி தவித்து வரும் பெண்...! மீட்டுத்தர கோரிக்கை விடுத்த கணவன்...!

வெளிநாட்டில் சிக்கி தவித்து வரும் பெண்...! மீட்டுத்தர கோரிக்கை விடுத்த கணவன்...!

வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியின் கலைஞர் 4வது தெருவை சார்ந்தவர் புவனா(37). இவர் குவைத் நாட்டில் வேலைக்காக, அவருக்கு தெரிந்தவரான ஜான்சன் என்பவர் மூலம் சென்று இருக்கிறார். குழந்தையை பராமரிக்கும் வேலை என அவர் அங்கு சென்றுள்ளார். ஆனால் ஒரு பெரிய குடும்பத்திற்கே தாம் வேலை செய்வதாகவும், தொடர்ந்து 20மணி நேரம் தம்மை வேலை வாங்குவதாகவும் கூறி அதிர்ச்சியான வீடியோவினை தனது கணவருக்கும் மகளுக்கும் அனுப்பியுள்ளார். மேலும் அந்த வீடியோவில்  பேசிய அவர், தன்னை அடித்து அவமானப்படுத்தி கழிவறையில் படுக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்த புவனாவின் கணவர் ஜேம்ஸ் பாலை தொடர்பு கொண்டு கேட்டபோது, கொரோனா காலக்ககட்டத்தில் தங்கள் குடும்பம் கடனில் சிக்கி கொண்டதாகவும், அந்த சமயத்தில் வேலை இல்லாமல் தவித்த வந்த தங்களது குடும்பத்திற்கு பழக்கமான ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலை இருப்பதாகவும் தாங்கள் அதற்கு உண்டான மருத்துவ பரிசோதனை பணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் புவனாவை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்

ஆனால் அங்கு சென்ற தன் மனைவி வீடியோவில் கூறும் போது 20மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்குவதாகவும், சாப்பிட உணவு கூட சரிவர அளிக்காமல் அடிப்பதாகவும், தூங்குவதற்கு கழிவறையை மட்டுமே தருவதாவும் கூறியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மூக்கில் இரத்தம் வரும் அளவிற்கு வேலை வாங்கி கொடுமை படுத்துவதாக கூறி கதறியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவரது கணவர் தணியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார். அந்த தொண்டு நிறுவனத்தின் சியிஓ கணியா பாபு மூலம்  தூதரகத்தை தொடர்புகொண்ட போது தூதரக அதிகாரிகள், எப்படியாவது புவனா தப்பி வந்து தூதரகத்தை சேர்ந்தால் மற்றதை தாங்கள் பார்த்து கொள்வதாக கூறி பதில் அனுப்பியதாக கணியா கூறுகிறார்.

மேலும் தற்போது புவனா தங்கி வேலை செய்துவரும் வீடோ அந்த நாட்டின் காவல் அதிகரி வீடு என்றும், அங்கிருந்து அவர் தப்பித்தால் அவர் மீது திருட்டு பழி சுமத்தி திருட்டு வழக்கு போடும் முயற்சியும் நடைபெறும் என்றும் அதிர்ச்சிகரமாண பதிலை அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் போலி ஏஜெண்ட்கள் மூலம்  இது போன்று வெளி நாட்டிற்கு, வெறும் மருத்துவ பரிசோதனை மட்டுமே செய்து கொண்டு செல்பவர்களை போலி ஏஜெண்டுகள் வேலைக்கு அனுப்புகிறோம் என கூறி விற்றுவிடுவதாக மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார் கணியா.

மேலும் பேசிய கணியா, இதுவரை தங்களின் தொண்டு நிறுவனம் மூலம் 25க்கும் மேற்பட்டோரை மீட்டு இருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் புள்ளி விவரத்தை அடுக்குகிறார். கலைஞர் நகர் பகுதியில் வசித்து வரும் இவர்களை தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்படியாவது மீட்டு தர உதவ வேண்டுமென்று குவைத்தில் சிக்கியிருக்கும் புவனாவின் மகளும் கணவரும் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இது போன்று போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டு வேலை என்று மாட்டிக்கொள்பவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.