அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை...! பார்வையிட்ட மத்திய அமைச்சர்..!

அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை...! பார்வையிட்ட மத்திய அமைச்சர்..!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பிரேசில் நாட்டை சேர்ந்த WEG நிறுவனம், 88 கோடி ரூபாய் மதிப்பில்  இந்தியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது. இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட இருக்கிறது . இந்த காற்றாலை டர்பைனை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் பகவந்த் குபா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து அந்த நிறுவன அதிகாரிகளிடம் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை செயல்பாடு, உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடலிவிளையில் பிரேசில் நாட்டை சேர்ந்த WEG நிறுவனம் இந்தியாவில் அதிக உற்பத்தி திறனான 4.2 மெகாவாட் காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது. எதிர்காலத்தில் 7 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  திறன் கொண்ட டர்பைன் தயாரிக்க உள்ளோம். இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. குஜராத்தில் 35 ஜிகாவாட், தமிழ்நாட்டில் 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது . மேலும், இதில் குறிப்பாக ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. இங்கு இரண்டு காற்றாலை டர்பைன் நிறுவ உள்ளோம். இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரத்தை விநியோகிக்க முடியும். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில்  மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பாரதப் பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கு போதுமான அளவு வாய்ப்பும் வளமும் இந்தியாவில் உள்ளது. சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும், பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்  என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்சியில் WEG நிறுவன நிர்வாக இயக்குனர் ஜீன்கார்நோபஸ்கீ,பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் சுரேஷ்,மார்த்தாண்டன், வள்ளியூர் நகர தலைவர் ராஜேஷ், வள்ளியூர் நகர பொதுச்செயலாளர் திரவியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com