5 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் சோதனை...வீட்டில் முகாமிட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்!

5 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் சோதனை...வீட்டில் முகாமிட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்!

நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான இடங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் பாஸ்கர் வீட்டில் முகாமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்து ரெய்டில் சிக்கும் அதிமுகவினர்:

சமீப காலமாகவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ். பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட சிலர் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த கே. பி. பி. பாஸ்கர்:

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு முறை அதிமுக சட்டமன்ற உறுப் பினராக இருந்தவர் கே. பி. பி.பாஸ்கர். இவர் நாமக்கல், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 எல். பி.ஜி டேங்கர் லாரிகள் உள்ளன. கே. பி. பி.பாஸ்கர் சட்டமன்ற உறுப் பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், மனைவி உமா பெயர் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பு சொத்துக்களை சேர்த்ததாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை:

சொத்து குறித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, பாஸ்கருக்கு சொந்தமான நாமக்கல்லில் 24 இடங்களிலும், மதுரை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தலா ஒவ்வொரு இடத்திலும் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் 8 குழுக்களாக பிரிந்து  இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முகாம்:

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கே. பி. பி.பாஸ்கர் வீட்டில், 5 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் சோதனை நீடித்து வருகிறது..  இந்த நிலையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பாஸ்கருக்கு ஆதரவாக அவரது வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி, பரமத்திவேலூர் எம்.எல்.ஏ சேகர் மற்றும் அதிமுக தொண்டர்கள் என அனைவரும் முகாமிட்டுள்ளனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.