PS1 டிக்கெட்டை விற்பனை செய்....இல்லையென்றால் அதற்கான பணத்தை கொடு...மாணவிகளை நிர்பந்திக்கும் கல்லூரி...!

PS1 டிக்கெட்டை விற்பனை செய்....இல்லையென்றால் அதற்கான பணத்தை கொடு...மாணவிகளை நிர்பந்திக்கும் கல்லூரி...!

மாணவிகளை பொன்னியின் செல்வன் திரைப்பட டிக்கெட் விற்பனையில் ஈடுபடுத்திய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம்:

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் விக்ரம், கார்த்திக், ஜெயம்ரவி, பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகை த்ரிஷா, ஐஸ்வரயா ராய் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதையும் படிக்க: இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

மாணவிகளிடம் டிக்கெட் விற்பனை:

இந்நிலையில், திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஹோலி கிராஸ் என்ற பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி நிர்வாகம் நேற்று திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான டிக்கெட்டை மொத்தமாக பெற்று மாணவிகளிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

டிக்கெட் விற்க சொல்லும் கல்லூரி நிர்வாகம்:

அதுமட்டுமல்லாமல், ஒரு மாணவி 20 டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் அதற்கான தொகையை அந்த மாணவி செலுத்த வேண்டுமென்றும் கல்லூரி நிர்வாகம் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு:

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், டிக்கெட் விற்க சொல்லி மாணவிகளை கட்டாயப்படுத்தும்  கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இருப்பினும், கல்லூரி நிர்வாகம் பொன்னியின் செல்வன் திரைப்பட டிக்கெட்டை விற்க சொல்லி  மாணவிகளை கட்டாயப்படுத்தியது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.