மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்...! ரத்து செய்யகோரிய வழக்கு..!

மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பதிவு செய்த தனியார் நிறுவனம்...! ரத்து செய்யகோரிய வழக்கு..!

சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர்  ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுரை ஆதீன மடம் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற மடமாக இருந்து வருகிறது. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை 292 அருணகிரி ஆதீனம் தரப்பில்  சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் தாலுகா மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு (பவர் ஒப்பந்தம்) செய்யப்பட்டுள்ளது. இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டம் உள்ளது. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. 

இந்நிலையில் ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293 வது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மறைந்த 292 வது ஆதீனம் இருந்த போது, இந்த  ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கின்றனர். அவர்கள் பண பலமிக்கவர்களாக உள்ளனர். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிக்க : பணி ஓய்வு பெற்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி...! வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்...!