விவசாய தோட்டத்தில் முகமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்...! அச்சத்தில் விவசாயிகள்...!

பழனி அருகே சட்டப்பாறையில் விவசாய தோட்டத்தில் முகமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்...தோட்டத்திற்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சம்...

விவசாய தோட்டத்தில் முகமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்...! அச்சத்தில் விவசாயிகள்...!

பழனி அடுத்த ஆயக்குடி, சட்டப்பாறை பகுதியில் விவசாயிகள் கொய்யா, மா, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.  வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக காட்டு யானை கூட்டம் ஒன்று நுழைந்தது. விவசாயத் தோட்டத்திற்குள் காட்டு யானை குட்டி ஒன்றையும் ஈன்றது. இதனை அடுத்து விவசாயிகள் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

பின்னர் காட்டு யானை கூட்டத்தை விவசாயத் தோட்டத்திற்குள் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர், ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார காலத்திற்கு மேலாக சட்டப்பாறையில் உள்ள விவசாய தோட்டத்திற்கு உள்ளேயே காட்டு யானை கூட்டம், நின்று வருவதால் தோட்டத்திற்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. 

கொய்யா தோட்டத்தில் இருந்து நாள்தோறும் கொய்யாப்பழங்களை பறித்து சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் விவசாயிகள் தற்போது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கொய்யாப்பழங்களை பறிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானை கூட்டம் விவசாயிகள் கவில்தேவ், சகாதேவன், ரவி உள்ளிட்ட பலரின் விவசாயத் தோட்டங்களுக்குள் சென்று வாழை, மாமரம், கொய்யா, தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. 

காட்டு யானைகளால் தொடர்ந்து சட்ட பாறை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் விரைவாக செயல் பட்டு காட்டு யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு வனத்துறையினரும் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினர், பழனி வனபகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் யானைகளுக்கு கொசு தொந்தரவு அதிகமாக இருப்பதன் காரணமாக யானைகள் வனத்திற்கு வெளியே மாறி மாறி சுற்றி வருகிறது. யானைகளை விரட்டவும்,  விவசாயிகளுக்கு யானைகளால் இழப்பு ஏற்படாத வகையில் வனத்துறை சார்பில் குழு அமைத்து யானைகளை கண்காணித்து வனப் பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியும் நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.