இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம் ...! விரட்டும் பணியில் வனத்துறையினர்..!

பழனி அருகே விவசாய தோட்டத்தில் இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம் ...! விரட்டும் பணியில் வனத்துறையினர்..!

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வன விலங்குகள்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட பல வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனவிலங்குகள் வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள், அவ்வப்போது நடைபெற்று வருகிறது. 

அச்சத்தில் விவசாயிகள் :

பழனியை அடுத்த ஆயக்குடி, சட்டப்பாறை பட்டா தோட்டத்தில் காட்டு யானை ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்பு குட்டி ஈன்றுள்ளது. குட்டி யானையின் அருகில் மேலும் நான்கு யானைகள் உள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். அதனால் விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இரண்டாவது நாளாக யானைகள் முகாம் : 

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு, பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பும் வரை, விவசாயிகள் வனத்தை ஒட்டியுள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக சென்று வரவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.