மீனவ கிராமத்திற்குள் நுழைந்த 50 பேர் கொண்ட கும்பல் - கலவரத்தில் வீடுகள் சேதம்..!

நாகையில் 50 பேர் கொண்ட கும்பல் மீனவ கிராமத்திற்குள் புகுந்து வீடு மற்றும் வாகனங்களை அடித்து உடைத்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவ கிராமத்திற்குள் நுழைந்த 50 பேர் கொண்ட கும்பல் - கலவரத்தில் வீடுகள் சேதம்..!

நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது மற்றும் ஏலம் விடுவது தொடர்பாக மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என கூறி மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு மேல பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.

இதனிடையே மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ் உள்ளிட்ட சிலரை கீழப்பட்டினச்சேரியை சேர்ந்த மீனவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதை கண்டித்து நள்ளிரவு மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இதையடுத்து மேல பட்டினச்சேரி கிராமத்தில் யாரும் இல்லாததை அறிந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் 50 பேர் ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். வீடுகளை அடித்து நொறுக்கியும், இருசக்கர வாகனங்களை உடைத்தும் சேதப்படுத்தினர். இதுத்தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து மேல பட்டினச்சேரி கிராமத்தில் நாகை எஸ்.பி ஜவஹர் தலைமையிலான அதி விரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், கலவரத்தில் காயமடைந்த மீனவர்கள் இரண்டு பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.