2.65 கோடி போட்டு கட்டுனது...ஒரே ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவலம்..!

2.65 கோடி போட்டு கட்டுனது...ஒரே  ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவலம்..!

பாவனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், கொடிவேரி அணையில் இரண்டரை கோடியில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

கொடிவேரி அணை:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம். இந்நிலையில், சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில், 2 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில், அணையின் கீழ் பகுதியில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும் வகையில், தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.

அடித்துச்செல்லப்பட்ட கான்கீரிட் தளம்:

கடந்த 2021ஆம் ஆண்டு, அமைக்கப்பட்ட இந்த கான்கிரீட் தளத்தால், சுற்றுலா பயணிகள் தைரியமாக அணையில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதில் கொடிவேரி அணையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

இதனால் கொடிவேரி அணையில் ஆங்காங்கே உடைந்த கான்கிரீட் துண்டுகளும், கம்பிகளும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அப்பகுதியில் தரமான கான்கீரிட் தளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.