வீட்டில் திடீரென வெடித்த பட்டாசு...அடுத்தடுத்து பரவிய தீயால்....நேர்ந்த விபரீதம்...!

வீட்டில் திடீரென வெடித்த பட்டாசு...அடுத்தடுத்து பரவிய தீயால்....நேர்ந்த விபரீதம்...!

நாமக்கல்லில் பட்டாசு கடை உரிமையாளர் வீட்டில் நிகழ்ந்த திடீர் வெடி விபத்தில் கடை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பட்டாசு வெடித்து விபத்து:

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த மேட்டுத்தெருவில் தில்லைகுமார்‌ என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அதிக சத்தத்துடன் அவரது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார், அவரது அம்மா செல்வி மற்றும் மனைவி பிரியா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல், பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெரியக்காள் என்பவரும் பலியானார்.

இதையும் படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்... ஈபிஎஸ்க்கு சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம்...7 நாட்களுக்குள்...புகார் அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்:

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் அடுத்தடுத்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி அதிகப்படியான பட்டாசுகளை வீட்டில் சேமித்து வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து நாமக்கல் வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.