பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து...  5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு...

சங்கராபுரத்தில் மின்கசிவால் பட்டாசு குடோன் தீ பிடித்து எரிந்ததில், அருகிலிருந்த 4 கடைகள் தரைமட்டமானது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து...  5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் கடைவீதியில் முருகன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்வதற்காக பட்டாசுகளை வாங்கி, கடையின்பின்புறம் உள்ள குடோனில் சேமித்து வைத்திருந்தார்.

இந்நிலையில் மின்கசிவு காரணமாக நேற்று பட்டாசு குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கு இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதன் அருகில் இருந்த அய்யங்கார் பேக்கரி, மம்மிடாடி ரெடிமேட்ஸ் கடைகளிலும் தீபரவியது. இதில் பேக்கரியில் இருந்த 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தது இதனால், கடைகள் இடிந்து தரைமட்டமானது. இவ்விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்து சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் அய்யப்பன், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயிணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் தடைபட்டதாலும், சிலிண்டர்கள் வெடித்ததாலும் தீயிணை உடனடியாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்.பி., ஜியாவுல் ஹக், ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.