மகனின் திருமணத்திற்கு மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தை!! நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி

மகனின் திருமணத்திற்கு மாட்டு வண்டி பந்தயம் நடத்திய தந்தை!! நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி

விளாத்திகுளம் அருகே மகனின் திருமணத்தை முன்னிட்டு தந்தை ஒருவர்,  "மாட்டு வண்டி பந்தயம்" நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  ஆறுமுகச்சாமி. மாட்டு வண்டி பந்தய வீரரான இவர், குடும்ப சூழல் காரணமாக, சென்னைக்கு குடியேறியுள்ளார். இதனால் மாட்டு வண்டிப் பந்தயத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

இந்நிலையில், மாட்டு வண்டி பந்தயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால், தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை தனது சொந்த ஊரான விளாத்திக்குளத்தில் ஏற்பாடு செய்தார். இதில், பெரிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரண்டு வகையான பந்தயங்கள் நடத்தப்பட்டன.

இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், சிவகங்கை,  மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி பந்தயத்தினை ஏராளமானோர் கண்டு களித்தனர். 

வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ஆறுமுகச்சாமி குடும்பத்தின் சார்பில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். இதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக ஆறுமுகச்சாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.