கிணத்துல குதிச்சி செத்துட்டேன் : போதை ஆசாமி அக்கப்போர் !!

எந்த கவலையும் இல்லாமல் தோப்பில் மல்லாக்கப் படுத்திருந்த போதை ஆசாமி

கிணத்துல குதிச்சி செத்துட்டேன் : போதை ஆசாமி அக்கப்போர் !!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமாருக்கு, கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பாலவிடுதி காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தனது கணவரின் உடலை மீட்டு தாருங்கள் என பெண் ஒருவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 

காவல் உதவி ஆய்வாளரின் அழைப்பை அடுத்து போர் கால அடிப்படையில் காலை 11:30 மணிக்கு அந்த பெண் குறிப்பிட்ட கிணற்றுக்கு தீயணைப்புத்துறை வீரர்கள் சென்றுள்ளனர். அங்கு கிணற்றை சுற்றிலும் கிராம மக்கள் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சித்ரா-வின் உறவினர்களும்  குவிந்திருந்தனர்.

இதனையடுத்து, உண்மையாகவே ஒரு நபர் கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள், தங்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். மேலும், நவீன கேமராவை கிணற்றுக்குள் இறக்கி உடல் எங்கேனும் சிக்கிக் கொண்டுள்ளதா என்றும் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர்.

மேலும் படியுங்கள்  : https://www.malaimurasu.com/posts/tamilnadu/Arumbakkam-bank-robbery-case

இறுதிச்சடங்குக்கு தயார்

இதனிடையே, கணவர் ராஜாமணி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சித்ரா கொடுத்த தகவலை அடுத்து அவரது உறவினர்கள் வீட்டின் முன்பாக பந்தல் போடும் பணியில் ஈடுபட்டனர். மைக் செட் கட்டியதுடன், இறுதி நிகழ்ச்சிக்காக ட்ரம்செட் காரர்களுக்கும் பணம் கொடுத்து வரவழைத்துள்ளனர். ராஜாமணியின் உடல் கிடைத்ததும் இறுதிச்சடங்கு செய்ய தயார் நிலையில் உற்றார் - உறவினர்கள் காத்திருந்தனர்.

கொலைப்பட்டினியுடன் தேடுதல் பணி
 
ஒருபுறம் கிணற்றில் தீவிர தேடுதல் பணி, மறுபுறம் வீட்டின் முன்பு இறுதி யாத்திரைக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலை 11.30 மணிக்கு கிணற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி முனீஸ்குமரன் தலைமையிலான வீரர்கள், பிற்பகல் 3.30 மணி வரையிலும் தண்ணீர் குடிக்காமலும் உணவு அருந்தாமலும், கொலை பட்டினியுடன் ராஜாமணியின் உடலை தேடிக் கொண்டிருந்தனர். 

தோப்பில் ரெஸ்ட்

கிறுகிறுக்கும் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கிணற்றில் உடலை தேடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆசாமி ஒருவர், நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் செம போதையில் தோப்பில் மல்லாக்க படுத்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கார் என்ற அதிர்ச்சித் தகவலை போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார். 

இதனைக் கேட்டு, அதிர்ந்துபோன பாலவிடுதி காவல்துறையினர் மற்றும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் அடித்து பிடித்து தோப்புக்கு சென்று பார்த்த பொழுது, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட அந்த நபர், செம போதையில் ஹாயாக கால்மேல் கால் போட்டுக் கொண்டு படுத்திருப்பதை கண்டு செம டென்ஷனாயினர்.

அட்வைஸ் பண்ண காவல்துறை

பின்னர், வேறு வழியின்றி அந்த நபரை மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்து விட்டு இதன் பிறகாவது தண்ணி அடிக்காமல் மனைவியுடன் ஒழுங்காக குடும்பம்  நடத்துங்கள் என அறிவுரை கூறிவிட்டு மீண்டும் தங்கள் பணிக்கு திரும்பினர். 

இதனிடையே, குடிபோதை ஆசாமி செய்த அக்கப்போரால் உச்சி வெயிலில் கொலை பட்டினியுடன் பணியாற்றிய புதிய அனுபவத்துடன் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அலுவலகம் திரும்பிய நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.