வாடகைக்கு வீடெடுத்து குத்தகைக்கு விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் கைது!

வாடகைக்கு வீடெடுத்து குத்தகைக்கு விட்டு பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் கைது!

வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டை உரிமையாளருக்கு தெரியாமல் பல நபர்களுக்கு பல லட்சம் ரூபாய் அளவிற்கு குத்தகைக்கு விட்ட கணவன் மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லதா இவர் வாழ்க வளமுடன் என்கிற யோகா மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அதே யோகா பயிற்சி மையத்தில் நளினி என்பவருடன் லதாவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

யோகா பயிற்சியாளர் லதாவிடம் பணம் அதிகமாக இருப்பதை தெரிந்து கொண்ட நளினி தனது கணவர் சங்கர் சென்னை கீழ்கட்டளை பகுதியில் சாய்சான் பில்டர்ஸ் என்கிற பெயரில் அலுவலகம் வைத்திருப்பதாகவும் அந்த அலுவலகத்தில் கட்டுமான தொழில்கள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், சென்னை ராம் நகர் பகுதியில் 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருவதாகவும் அதில் ஒன்று உங்களுக்கு குறைந்த விலையில் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த வீடுகளின் வரைபடத்தையும் நளினி தம்பதியினர் லதாவிடம் காண்பித்துள்ளனர்.

மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 887 சதுர அடி உள்ள முதல் மாடியில் 2 பிஎச் கே அளவு கொண்ட வீட்டை 59 லட்சம் ரூபாய்க்கு கொடுப்பதாக பேரம் பேசியுள்ளனர். இதில் லதா முதற்கட்டமாக 35 லட்சத்தை நளினி தம்பதியினருக்கு வங்கியின் மூலம் செலுத்தியுள்ளார்.

லதா கடந்த வருடம் செலுத்திய பணம் திருப்பி வராத காரணத்தினால் வீட்டை கட்டி தருமாறு சங்கர் மற்றும் அவரது மனைவி நலினியிடம் தொடர்ச்சியாக கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஏமாற்றி வந்ததை தெரிந்து கொண்ட லதா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்று உள்ளார். 

அப்பொழுது தான் தெரியவந்தது ஷங்கர் வீட்டை வாடகை எடுத்து உரிமையாளருக்கே தெரியாமல் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஏமாற்றியதாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை மடிப்பாக்கத்தில் மட்டும் பதினாறு புகார்கள் இதுபோன்ற வீட்டு உரிமையாளருக்கே தெரியாமல் வீட்டை மற்ற நபர்களுக்கு குத்தகை விட்டது தொடர்பான புகார்களும் தொடர்ச்சியாக குவிந்துள்ளது. 

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட லதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தனிப்படை போலீசார் நளினி மற்றும் சங்கர் தம்பதியினரை கடந்த ஒரு மாதமாக தேடி வந்தனர் இதனை அடுத்து அவர்களுடைய செல்போன் டவர் லொகேஷன் வைத்து தம்பதியினர் தாம்பரம் அடுத்த படப்பை பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் மக்களிடம் இருந்து ஏமாற்றிய பணத்தை கடன்களை அடைப்பதற்கு சரியாக இருந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:மேகதாட்டு அணை திட்டம்: டி.கே.சிவகுமாருக்கு வைகோ கண்டனம்!