தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்...! ஒருவர் உயிரிழப்பு...!

சேலம், ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து ஏற்படுத்தியதில் ஆந்திரா மாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்...! ஒருவர் உயிரிழப்பு...!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில், வரும் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், வடமாநிலங்களில் வேலை செய்யும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அதனால், இன்று காலை முதலே சாலையில் அதிகபடியான வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்த தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் ஹெல்மெட், கண் கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று மதியம் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென ஓமலூர் விமான நிலையம் அருகே உள்ள குப்பூர் பகுதியில் சாலை ஓரம் வைக்கபட்டிருந்த கடைக்குள் புகுந்தது. கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் இருந்து பிரிந்து வந்து, மரத்தில் மோதி பின்னர், சாலையோரம் கடை வைத்திருந்த இளைஞர் மீது மோதியது. இதில் அந்த இளைஞர் தூக்கி வீசிபட்டார். 

இந்த விபத்தில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநில இளைஞரின் உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவாடா பகுதியை சேர்ந்த 21 வயது ரமணா என்பது தெரிய வந்தது.