திருவண்ணாமலை ரோட்டரி கிளப் ஆப் மூன் சிட்டி மற்றும் லைட் சிட்டி, பொன்முடி இல்லந்தோறும் நூலகம், கௌரா இலக்கிய மன்றம், அண்ணா நகர் சைக்கிள் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சியை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகரின் புறவழிச்சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முதல் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இஸ்லாமிய புத்தக நிலையம், கௌரா பதிப்பக குழுமம், தமிழ் சோலை பதிப்பகம், சிவகுரு பதிப்பகம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருகை தந்து 16 அரங்குகள் அமைத்து இந்த புத்தக கண்காட்சியினை நடத்தி வருகின்றனர்.
இந்த புத்தக திருவிழாவில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பயனுள்ள புத்தகங்களும், அரசு தேர்வுகள், வங்கி தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகம் புதியதாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் சிறுவர்களுக்கு தேவையான நீதிக்கதைகள், பொது அறிவு, கலை அறிவியல் இலக்கியம், சங்க கால இலக்கியங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த புத்தகத் திருவிழாவில் புதிய வரவாக உள்ள கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கண்காட்சிக்கு வருகைதரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10 முதல் 30 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்ய உள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.