தமிழகத்தில் இன்று 9-வது மெகா தடுப்பூசி முகாம்... 2 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம்...

தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 9-வது மெகா தடுப்பூசி முகாம்... 2 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம்...

தமிழகத்தில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவைதவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினர் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் ஒரு கோடி 75 லட்சம் தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன.

இந்த நிலையில் விரைவாக அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்துவதற்காக இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி, 9-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. 50 ஆயிரம் முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் போடப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வாரத்தில் 2 நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தயங்காமல் வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.