90 ஆயிரம் டன் யூரியா தமிழகத்திற்கு ஒதுக்கீடு- மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒதுக்கீடு செய்துள்ளது.  

90 ஆயிரம் டன் யூரியா தமிழகத்திற்கு ஒதுக்கீடு- மத்திய அரசு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக, 24 லட்சத்து 82 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

இதனால் யூரியா மற்றும் டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அக்டோபர் மாதத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் படி, 63 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தமிழக அரசுக்கு வழங்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே கூடுதலாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, கடந்த 21ஆம் தேதி அன்று மத்திய உரத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதாகவும் இதன் காரணமாக, காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி யூரியாவை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர காரைக்கால் துறைமுகத்தில் தற்போது இருப்பில் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, ரயில் மார்க்கமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 

நாள்தோறும் உர இருப்பு குறித்து ஆய்வு செய்து, மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கும் வகையில் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.