சென்னைக்கு வந்த 9 லட்சம் தடுப்பூசிகள்!

ஐதராபாத், புனேவில் இருந்து 9 லட்சம் கோவிட்ஷீல்டு, கோவாக்‌சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

சென்னைக்கு வந்த 9 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள்  அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. மேலும் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து சிறப்பு முகாமில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது. ஆனால் தடுப்பூசிகள் இல்லாமல் பல இடங்களில் முகாமங்கள் மூடப்பட்டு இருந்தன.  இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

தமிழகத்திற்கு இதுவரை  மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 2 கோடியே 35 லட்சத்தி 60 ஆயிரத்தி 420 கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 37 லட்சத்தி 5 ஆயிரத்தி 695 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த  விமானத்தில் 65 பெட்டிகளில் 7 லட்சத்தி 66 ஆயிரத்தி 800 கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. அதுப்போல் ஜதரபாத்தில் இருந்து 12 பெட்டிகளில் 1 லட்சத்தி 33 ஆயிரத்தி 360 கோவாக்‌சின் தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில  சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.