ஜெயலலிதா செஞ்ச அதே தப்ப செஞ்சா இப்போ இருக்குற நிலையை கூட காப்பாதிக்க முடியாது - வீரமணி காட்டம்

தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்,செய்த தவறை தொடர்ந்து செய்தால் அதிமுக தற்போது உள்ள இடத்தை கூட தக்க வைத்து கொள்ள முடியாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா செஞ்ச அதே தப்ப செஞ்சா இப்போ இருக்குற நிலையை கூட காப்பாதிக்க முடியாது - வீரமணி காட்டம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 89வாது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு,கே.என். நேரு,எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கி.வீரமணி.

தந்தை பெரியார் வாழ்நாள் மாணவன் ஆகிய நான்,பெரியார் லட்சியங்களை, அவர் விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் பெரியார் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று சொன்னதை இன்றைய ஆட்சி செயல்படுத்தி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது.

ஒவ்வொரு நாளும் மக்களுக்கான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எஞ்சி உள்ள என் வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்பு சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பது, ஆட்சிக்கு அரணாக இருப்பது, ஆணவ கொலைகளை தடுக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உட்பட 5 பணிகளை இந்த ஆண்டு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்தார். சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளித்த அவர்:

திராவிட கொள்கைக்கும் அண்ணாவிற்கும் சம்மந்தம் இல்லாமல் எப்படி பெயர் வைத்து உள்ளனர் என்பதற்கு இது ஒரு அடையாளம்,கொள்கைகளை மறந்து விட்டு ஏற்கனவே செய்த தவறை மீண்டும் அவர்கள் செய்வது கண்டிக்கத்தக்கது. தமிழ் நாட்டில் தமிழ் திராவிட ஆட்சியில் தை 1ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்,இதனை 1932ஆம் ஆண்டு தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர். இதனை தான் கலைஞர் கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா தன் வீம்புக்காக மாற்றி தவறு செய்தார். இதே தவறை தற்போது உள்ள அதிமுகவினர் செய்தால் தற்போது உள்ள நிலையை கூட அவர்களால் காப்பாற்றி கொள்ள முடியாது என தெரிவித்தார்.