கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 6 புதிய அறிவிப்பு...

தென்சென்னையில் 250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 6 புதிய அறிவிப்பு...

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசுத்தரப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போன்றே, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 2 லட்சம் சதுர அடி பரப்பில், ரூபாய் 70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது.  

மேலும், தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிதாக ’இலக்கிய மாமணி விருது’ வழங்குவதோடு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்றும், 

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய, மாநில மற்றும் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் இலக்கிய விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளும், 6 கோடியே 20 லட்சம் மதிப்பில் 54 உலர்களங்கள் மற்றும் உலர்விப்பான்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இலவசமாகப் பயணிக்கலாம் என்றும், ஊரடங்கு முடிந்தவுடன் இது நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.