தடுப்பணையில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி.... மாயமானவரை தேடும் பணி தீவிரம்!

தெலுங்கானா மாநிலம் அருகே தடுப்பணையில் குளிக்க சென்ற மாணவர்களில் 5 பேர் தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பணையில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி....   மாயமானவரை தேடும் பணி தீவிரம்!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசில்லா நகரை ஒட்டி பகுதியில் மன்யார் நதி ஓடுகிறது. சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக இந்த மன்யார் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் நதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் முழு கொள்ளளவை எட்டிய மழை வெள்ளம் அங்கிருந்து வழிந்து ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீசில்லா நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்கள் அங்குள்ள தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனர். முதலில் 6 மாணவர்கள் தடுப்பணையில்  தேங்கி இருக்கும் நீரின் ஆழம் தெரியாமல் இறங்கி அதில் மூழ்கினர்.

அப்போது தங்களுடன் வந்த சக மாணவர்கள் தண்ணீருக்குள் மூழ்குவதை பார்த்த மற்ற 2 பேரும் ஓடி சென்று நடந்த சம்பவம் பற்றி தங்கள் குடும்பத்தாரிடம் கூறினர்.  உடனடியாக விரைந்து வந்த மாணவர்களின் உறவினர்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். தடுப்பணையில் தண்ணீர் மிகவும் ஆழமாக இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை  என தெரிகிறது

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் நீரில் முழ்கிய 5 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் ஒரு மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தண்ணீருக்குள் மூழ்கி இறந்த  மாணவர்கள் அனைவரும் 11 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.