5 கோடி செலவில் நாட்டின மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும் - மீன் வளத்துறை அமைச்சர்

தமிழ்நாட்டின் நாட்டின மீன்களை பாதுகாத்து பெருக்கிட, 5 கோடி செலவில் நாட்டின மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.

5 கோடி செலவில் நாட்டின மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும் - மீன் வளத்துறை அமைச்சர்
மீன்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அயிரை மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, தேனி மாவட்டத்தில் அயிரை மீன் ஆராய்ச்சி மையம் 2.91 கோடி செலவில் அமைக்கப்படும் என்றார்.
 
கடல் மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்பு மேற்கொள்ள 1.08 கோடி மானியம் வழங்கப்படும் எனவும்  நவீன உயிர்கூழ்ம  தொழில்நுட்பத்தின் மூலம் உவர்நீர் மீன்வளர்ப்பை மேற்கொள்ள 1.87 கோடி மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்
 
சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ரூ.50 கோடி செலவில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன்,நாட்டின மீன்களை பாதுகாத்து பெருக்கிட, ரூ.5 கோடி செலவில் மீன் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும் என்றார்
 
மேலும் மீன்பிடி விசைப்படகுகளில் தானியங்கி கடற்கலன் கண்காணிப்பு கருவி பொருத்திட ரூ.70 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் பாரம்பரிய படகுகளுக்கு மாற்றாக கண்ணாடி நாரிழைப் படகுகள் வாங்கிட 300 மீனவர்களுக்கு .6. 5 கோடி மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
மீன்களை கையாள்வதற்கு பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள், குளிர்பதன கிடங்குகள், மீன் அங்காடிகள் அமைத்தல், குளிர்காப்பு வாகனம், இருசக்கர & 3 சக்கர வாகனங்கள் வாங்கிட 393 பயனாளிகளுக்கு 24.54 கோடி  மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
 
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு வருகின்ற மே மாதம் சிறப்பு நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், உவரி,பழவேற்காடு, மற்றும் வாணியக்குடி ஆகிய இடங்களில் புதிய மீன்பிடி துறைமுக ஆய்வு பணி விரைவில் துவங்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மரக்காணம் அழகன்குப்பம் பகுதியில் ரூ.261 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி, சுற்றுசூழல் அனுமதி பெற்ற உடன் விரைவு படுத்தப்படும் என்றும்  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.