4  கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

4  கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுடன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட நீதிபதிகள் மட்டத்தில் இருந்த உயா் நீதிமன்ற தலைமை பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேரை சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா்  உத்தரவு பிறப்பித்திருந்தார்.

புதிய நீதிபதிகள்  பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, புதிய  நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இன்னும் 11 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.

பின்னர், புதிய நீதிபதிகளை வரவேற்ற தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், புதிய நீதிபதிகளான சக்திவேல், தனபால் மற்றும் குமரப்பன் ஆகியோர் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்களாகவும், நீதிபதி ராஜசேகர் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், உயர் நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், உயர் நீதிமன்றத்தின் மரபுகளை உறுதிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேல் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய புதிய நீதிபதிகளின் அனுபவம் சிறந்தமுறையில் பலனளிக்கும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் குறிப்பிட்டார். மேலும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர்.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி சக்திவேல், உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

நீதிபதி தனபால், பள்ளிப்படிப்பு முதல் தமிழ் வழியில் படித்ததாகவும், தமிழ் வழியில் படித்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம் எனவும் இயலாதது என்ற எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

நீதிபதி குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க:தமிழ்நாடு அமைச்சரவையும் சிறுபான்மையினரும்!