அணைகளில் இருந்து 25000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்- வெள்ளத்தில் மூழ்கிய 25 கிராமங்கள்  

குமரி மாவட்ட அணைகளில் இருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால்  25 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அணைகளில் இருந்து 25000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்- வெள்ளத்தில் மூழ்கிய 25 கிராமங்கள்   

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தோவாளை பகுதியில் இன்று கொட்டிய கன மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

அருமல்லூர், கீரிப்பாறை , திடல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக அகஸ்தீஸ்வரம் தாலுகா பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த  நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. இதேபோன்று நெல் அறுவடை செய்ய வயல்களில் நிறுத்தப்பட்டிருந்த கதிர் அறுக்கும் இயந்திரங்களும் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல் தற்போது பயிரிடப்பட்ட கும்பப்பூ சாகுபடி பயிர்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 15 ஆயிரம் கனஅடி உபரி நீரும்  பெருஞ்சாணி அணையில் இருந்து  8254 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது.இதனால் களியல்,மரப்பாடி, வள்ளியாற்று முகம்,திருவட்டார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வீடுகள் தண்ணீரில் தத்தளிப்பதால்  மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர். கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதேபோல்  தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இருப்பதால் தேங்காய்பட்டிணம் வெட்டு மணி சாலையில் தண்ணீர் சுழ்ந்து சாலை துண்டிக்கபட்டுள்ளது. குழித்துறை பனச்சமூடு சாலையிலும் தண்ணீர் சூழ்ந்து சாலை துண்டிக்கபட்டுள்ளது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மற்றுபாதையில் போருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.